தமிழ்நாடு

பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – இளைஞர் கைது

By Jayakumar
15 Jun 2025, 06:21 PM
நள்ளிரவில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் மீது கேக் வைத்து நீளமான பட்டாகத்தி பயன்படுத்தி கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள இளைஞர்களிடையே வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டது.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாரிடம் கேட்டபோது நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கபாடி விளையாடும் அணியை சேர்ந்தவர்கள் எனவும், அதில் உள்ள ஒரு வாலிபருக்கு பிறந்தநாள் என்பதால் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடியதாகவும், கேக் வெட்டுவதற்கு பயன்படுத்தியது அட்டையால் ஆன கத்தி எனவும் தெரிவித்தனர்.

இளைஞர் கைது

இருப்பினும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி கொண்டாடிய இளைஞரை சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த நிஷாந்த் (வயது 25) என்பதும், இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிஷாந்த்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.