தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா? ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை!

By Christon
23 Feb 2026, 09:59 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இது நகை வாங்குவோர் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரணத்தங்கம்: இன்றைய நிலவரம்

வாரத் தொடக்க நாளான இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,440 அதிகரித்து, சவரன் ரூ. 1,18,880 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கடும் உயர்வு

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ. 10 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 3 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை உயர்வுக்கான காரணங்கள்

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் உலகளாவிய அரசியல் சூழல்கள் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.