தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்!

By Christon
24 Oct 2026, 09:56 PM
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்துள்ளார்.

தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

விருதுநகரில் இன்று (அக்.24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தவெக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள சூழலில், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

தற்போது உயிரிழந்தவர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதுடன், தகுதியான நபர்களுக்குத் திட்டத்தை முழுமையாகக் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், பல இடங்களில் பலரின் வங்கிக் கணக்குகளுக்கு வர வேண்டிய பணம் தவறுதலாக வேறு ஒருவரின் கணக்கிற்குச் செல்வது குறித்த புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்யும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

கடந்த ஆட்சியில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் முழுமையான பயனை அடையவில்லை என்று குறிப்பிட்ட அவர், தவெக ஆட்சியில் மக்கள் முழுப் பயன் அடையும் வகையிலான வெளிப்படையான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். முதல்வர் விஜய் நல்லெண்ணத்துடன் இத்திணத்தை முறைப்படுத்த முயல்வதாலேயே சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.