Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Weather Update: தமிழகத்தில் செப்.27 வரை மழை நீடிக்கும்!

By Christon
21 Sep 2025, 02:56 PM
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், 25 முதல் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் முதல் வரும் 23 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.