Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

7 வருட வாஷிங்மெஷின்.. மொத்தமாக போட்ட துணி.. பற்றி எரிந்த வீடு

By MUTHUKRISHNAN
30 May 2025, 08:06 AM
சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் சிவன் கோயில் தெற்கு தெரு பகுதியில் கமலா மற்றும் அவரது மகள் சாந்தி, சாந்தியின் கணவர் மூர்த்தி மற்றும் அவர்களது மகன்கள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கமலா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனை சென்றுள்ளார். மற்றவர்களும் வேலைக்காக வெளியில் சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் வீட்டில் சாந்தி தனியாக இருக்கும் போது துணிகளை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் பயன்படுத்தியுள்ளார்.

சில நேரம் கழித்து, வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதை அணைக்க தண்ணீர் ஊற்றிய போதும், தீ மளமளவென பற்றி எரிந்து மின்சார வயர்களில் பரவியது. இதனையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறினர். வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது. இந்த எதிர்பாரா விபத்தினால் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்து சம்பவத்தினால் அப்பகுதியில் மின்சாரம் சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் 7 வருடமாக பயன்படுத்தி வரும் வாஷிங் மிஷினில் அதிகளவு துணி பயன்படுத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்பாக இச்சம்பவத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீக்கிரையானதாகவும், திருமணத்திற்காக சேர்த்து வைத்த அனைத்து பொருட்களும் நாசமானதாக வீட்டில் வசித்து வரும் கமலா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். வாஷிங் மெஷின் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.