Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விருதுநகர் எஸ்.பி. மிரட்டல்- இபிஎஸ் கண்டனம்

By Jayakumar
03 Jul 2025, 04:37 PM
மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று முன் தினம் காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு

இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 பேரின் உடல்களை மட்டும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் 6 பேரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறுப்பு தெரிவித்து, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மிரட்டல் விடுத்த எஸ்.பி

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி மருத்துவமனை வளாகத்திற்கு அழைத்து சென்று பேசினார். அப்போது அவர்கள் 6 பேரின் உடல்களை வாங்க மறுத்ததை தொடர்ந்து, “இதுக்கு மேல் அனைவரும் ஒழுங்காக இருக்க வேண்டும், இல்லை என்றால் வேற மாதிரி ஆகிடும்” என மிரட்டல் விடுத்த்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து "ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இபிஎஸ் கண்டனம்

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? பட்டாசு ஆலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்வாகத் திறன் இல்லை; போராடும் மக்களின் கோரிக்கையைக் கேட்கக் கூட மனமில்லை; மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் மு.க.ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றனவா?

வரலாற்றுப் பாசிசம் தோற்றுவிடும் ஸ்டாலின் அரசின் கொடுங்கோன்மையிடம்! மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.