தமிழ்நாடு

மலைக்கிராமத்தின் முதல் ராணுவ வீரர்.. கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

By Jayakumar
15 Jun 2025, 08:29 AM
அக்னிவீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த மலைக்கிராம வாலிபருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது கிராமத்தில் அரசு பணியில் சேர்ந்த முதல் நபர் என்றும் பெருமிதம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுக்கா மாடக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட உளிபெண்டா மலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நரசிம்மய்யா. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் முரளி (20) இவர் தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு பிகாம் சிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது ராணுவ படை பிரிவான அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர அவர் விண்ணப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அக்னிவீர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த நவம்பர் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் அவருக்கு இராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, ராணுவ பயிற்சியை முடித்து கொண்டு தனது சொந்த கிராமமான ஓசூர் அருகே உள்ள உளிபெண்டா கிராமத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிராம மக்கள் பேனர்கள் வைத்து மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவருக்கு சால்வைகள் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ந்தனர்.

உளிபெண்டா மலை கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இதுவரை யாரும் அரசு பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. முதன்முறையாக அரசு பணியிலும் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர் பணியிலும் சேர்ந்த முரளியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர். அவருக்கு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் பணி வழங்கப்பட்டுள்ளது.