Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்!

By MUTHUKRISHNAN
06 Jun 2025, 07:06 PM
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்திய விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு "விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்" (Viksit Krishi Sankalp Abhiyan) என்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழில் 'வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற பெயரில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

"வளர்ந்த பாரதம்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், 'ஆய்வகத்திலிருந்து வயலுக்கு' என்ற கருத்தை செயல்படுத்துவதை இத்திட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கிய இந்த வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்:

சிவகங்கை மாவட்டம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் பகுதிகளில் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் "வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்” நடைப்பெற்றது. விவசாயிகளுக்கான இந்த கருத்தரங்கில் டாக்டர் ராமகிருஷ்ணன், கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் ஆடு,மாடு,கோழி போன்றவற்றிற்கு ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும், விவசாயத்தில் கால்நடைகளின் பங்குகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.



முன்னதாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர்.செந்தூர் குமரன், விவசாயிகளுக்கு பயனளிக்கும் பல பயனுள்ள விவசாய திட்டங்கள் குறித்தும் அதன் பயன்களும், திட்டத்தில் எவ்வாறு இணைய வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானி டாக்டர் ஆறுமுகநாதன், கரும்பு சாகுபடியில் புதிய தொழில் நுட்பம் குறித்தும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு திட்டங்கள் குறித்த கையேடும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிராமங்கள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். குருந்தங்குளத்தில் நடைப்பெற்ற நிகழ்வில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்விழி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சத்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

"வளமான விவசாயி நாட்டின் பெருமை” என்கிற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வில், நவீன விவசாய முறைகள், மேம்பட்ட விதை வகைகள், ட்ரோன் தொழில்நுட்பம், டிஜிட்டல் விவசாயம், வேளாண் ஸ்டார்ட்அப்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பயிர் வகைகள், நீர் பாசன முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குறைந்த செலவிலான பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.