தமிழ்நாடு

’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ - சிவகங்கையில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் தொடக்கம்

By MUTHUKRISHNAN
30 May 2025, 10:27 AM
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
இந்திய விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு "விக்ஷித் கிருஷி சங்கல்ப் அபியான்" (Viksit Krishi Sankalp Abhiyan) என்ற ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தமிழில் 'வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற பெயரில் இத்திட்டம் அழைக்கப்படுகிறது.

"வளர்ந்த பாரதம்" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், 'ஆய்வகத்திலிருந்து வயலுக்கு' என்ற கருத்தை செயல்படுத்துவதை இத்திட்டம் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. நேற்றைய தினம் (மே 29, 2025) ஒடிசாவின் பூரியில், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 'வளமான விவசாயி, நாட்டின் பெருமை’ என்கிற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் வருகிற ஜூன் 12, 2025 வரை சுமார் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.

சிவகங்கை: குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம்

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் "வளமான விவசாயி நாட்டின் பெருமை” என்ற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமும், மாநில வேளாண் துறையும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானி டாக்டர் ஆறுமுக நாதன் மற்றும் KVK டாக்டர் செல்வராஜ் ஆகியோர், பருவநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தில் முன்னெடுக்க வேண்டிய உத்திகளும் அதன் அவசியங்களையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.


முன்னதாக குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர்.செந்தூர் குமரன் பாரதப் பிரதமரின் விவசாய திட்டங்கள் மற்றும் மத்திய-மாநில அரசின் வேளாண் திட்டங்கள் குறித்தும் அதன் பயன்களும் எவ்வாறு இணைய வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். வட்டார வேளாண் உதவி இயக்குனர் ப்ரியா உழவரைத் தேடி திட்டத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ஊட்டச்சத்து மருந்தினை தெளிப்பது குறித்த செயல்முறை விளக்கம் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது .இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



"வளமான விவசாயி நாட்டின் பெருமை” என்கிற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வில், நவீன விவசாய முறைகள், மேம்பட்ட விதை வகைகள், ட்ரோன் தொழில்நுட்பம், டிஜிட்டல் விவசாயம், வேளாண் ஸ்டார்ட்அப்கள், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பயிர் வகைகள், நீர் பாசன முறைகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குறைந்த செலவிலான பாதுகாப்பு முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.