தமிழ்நாடு

விஜய்க்கு நடிகையுடன் உறவு: விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா மனு!

By Christon
27 Feb 2026, 05:05 PM
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சுமார் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சங்கீதா முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ள காரணங்கள்

சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்குத் தெரியவந்ததாகவும், இது தனக்குப் பெரும் வலியையும், மன உளைச்சலையும் கொடுத்ததாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது திருமண நம்பிக்கையை மீறுவதற்கும், துரோகத்திற்கும் சமம் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை எப்போது?

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விவாகரத்து மனு மீதான முதற்கட்ட விசாரணை, வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.