Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

By VASUKI
09 Mar 2025, 12:10 PM
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரின் செயல்பாடுகளை கண்டித்தும் மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து  சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 14 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இதனை அடுத்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கடலூர் 

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரின் செயல்பாடுகளை கண்டித்தும் மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்காக போலீஸ் அனுமதியை முறையாக கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விஜயுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பங்கேற்பு?

அடுத்த வாரத்தில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் மூலம் மத்திய அரசின் உடனடி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.