தமிழ்நாடு

வெற்றி பயணம் திட்டம்: "நாங்கெல்லாம் இருக்கிறதா.. சாகுறதா?" தனியார் பேருந்து ஓட்டுநர்கள் குமுறல்!

By Christon
07 Oct 2026, 05:49 PM
வெற்றி பயணம் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வெற்றி பயணம்' திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் லட்சக்கணக்கான பெண் பயணிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்தாலும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ தொழிலாளர்களும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இலவசப் பேருந்து வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குறுகிய தூரப் பயணங்களுக்கும், உள்ளூர் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களும் பெருமளவில் அரசு நகரப் பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதனால் முன்பு ஆட்டோக்களை நம்பியிருந்த பெண் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, வாகனப் பராமரிப்புச் செலவு ஆகியவற்றுக்கு இடையே, நாள்தோறும் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச வருமானத்தைக் கூட ஈட்ட முடியாமல் தவிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தங்களது மனக்குமுறல்களை ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் வெளியிட்ட வீடியோவில், "இலவச பஸ் அறிவிப்பு வந்ததுல இருந்து ஒரு லேடிஸ் கூட பிரைவேட் பஸ்-ல ஏராள. இப்படி இருந்த நாங்க எங்க போறது. இப்படியே இருந்த எங்க நிலைமை என்ன ஆகுறது.. நாங்கெல்லாம் இருக்கிறதா.. இல்ல தூக்குபோட்டு சாகுறதா?" என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

அரசு நகரப் பேருந்துகளில் இலவச சலுகை வழங்கப்படுவதால், ஒரே வழித்தடத்தில் இயங்கும் தனியார் நகரப் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.

குறிப்பாகக் கிராமப்புறங்களில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்குப் பயணிக்கும் பெண்கள், கட்டணம் செலுத்த வேண்டிய தனியார் பேருந்துகளைத் தவிர்த்து, அரசுப் பேருந்துகளுக்காக காத்திருந்து பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தனியார் பேருந்துகளுக்கான வசூல் கணிசமாகக் குறைந்து, டீசல் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் திணறுவதாகப் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கூறுகின்றனர்.

மகளிருக்கான இத்திட்டம் வரவேற்கத்தக்க சமூக நலத் திட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய மாற்றுத் திட்டங்களையோ அல்லது நிவாரண வழிமுறைகளையோ பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.