தமிழ்நாடு

வெற்றிப் பயணத் திட்டம்... வெறிச்சோடும் ஆட்டோ ஸ்டாண்டுகள்? வெறியாகும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

By Sumalekha
08 Oct 2026, 01:22 PM
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தங்களது அன்றாடப் பயணங்களுக்கு பேருந்துகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திமுக ஆட்சியில் மாவட்டத்திற்குள்ளேயே பெண்கள் பயணம் செய்து சொள்ள கொண்டுவரப்பட்ட ’கலைஞர் விடியல் பயணத் திட்ட்த்தை விரிவுப்படுத்திய தவெக அரசு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வெற்றிப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் பேருந்துகளில் பெண்களின் பயணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதன் தாக்கம் தற்போது ஆட்டோ தொழிலில் பெரியளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

‘சவாரி குறைந்தால் குடும்பத்தை எப்படி நடத்துவது?’

ஆட்டோ ஓட்டுநர்களைப் பொறுத்தவரை, தினசரி கிடைக்கும் சவாரிகள்தான் அவர்களின் வருமானத்திற்கான முக்கிய ஆதாரம். ஏற்கெனவே பெட்ரோல், வாகனப் பராமரிப்பு, EMI உள்ளிட்ட செலவுகளை சமாளித்து வரும் நிலையில், பயணிகள் எண்ணிக்கை குறைந்தால் தங்களது வருமானமும் குறையும் என அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, “பெண்களுக்கு இலவசப் பயணம் கிடைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், நாங்களும் குடும்பத்தை நடத்த வேண்டியிருக்கிறது. பெண்கள் பேருந்திலேயே இலவசமாகச் சென்றுவிட்டால் எங்களுக்கு சவாரி எப்படி கிடைக்கும்?” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மற்றொரு ஆட்டோ ஓட்டுநர், “ஏற்கெனவே சவாரிக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பெட்ரோல், வண்டி பராமரிப்பு செலவு எல்லாம் அதிகமாகிவிட்டது. இப்போது சவாரியும் குறைந்தால் தினசரி வருமானம் இன்னும் பாதிக்கப்படும்” என்கிறார்.

ஆட்டோ ஸ்டாண்டுகளில் என்ன நிலை?

குறிப்பாக, குறுகிய தூரப் பயணங்களுக்கு ஆட்டோவை பயன்படுத்தி வந்த பெண்கள், இனி இலவசப் பேருந்துப் பயணத்தைத் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக ஓட்டுநர்கள் கருதுகின்றனர். இதனால் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் சவாரிக்காக காத்திருக்கும் நேரம் அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“அரசின் திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், இதனால் பாதிக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரசு ஏதாவது மாற்றுத் தீர்வு அல்லது நிவாரணம் வழங்க வேண்டும்” என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பெண்களுக்கு வரப்பிரசாதமா... ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுமையா?

பெண்களின் பயணச் செலவைக் குறைக்கும் வகையில் பார்க்கப்படும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம், மறுபுறம் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ஒருபுறம் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்... மறுபுறம் சவாரி குறையும் என்ற அச்சத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள்... அரசின் திட்டத்தின் பலன்கள் ஒரு தரப்பை சென்றடையும் நிலையில், மற்றொரு தரப்பின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.

‘வெற்றிப் பயணம்’ பெண்களுக்கு வெற்றியா?ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருமான இழப்பா? இந்த விவகாரம் அடுத்தடுத்து எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப் போகத்தான் தெரியவரும்.