தமிழ்நாடு

“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!

By Sumalekha
27 Jun 2026, 07:50 PM
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். மேலும், வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய மறுத்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ, கடும் ஆவேசத்துடன் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

“இரண்டு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்வது சரியான முடிவா? இதனால் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இல்லையா?” என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, “குதிரை பேரம் யார் செய்வது? எந்த கட்சி நடத்துகிறது? “செந்தில் செல்வனை கொண்டு போயிருக்கிறார்கள். அவர் திமுகவில் சேர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள். இது குதிரை பேரமா? ஒட்டக பேரமா? திமுகவுக்கு ஆதரவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைக்கோ, திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணம் “ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்றாலும், அதுவும் திமுக சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று எங்களை நிர்பந்தித்தார்கள். மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இதுபோன்ற நிர்பந்தம் இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டன, அந்த சூழ்நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்தால், வைகோவுக்கு இதுதான் வேலை என்று ஊடகங்கள் விமர்சிக்க தயாராக இருந்தன. அதனால் அமைதியாக இருந்தேன்” என்றும் கூறினார்.

மேலும், திமுக தங்களை சரியாக நடத்தவில்லை நான்கு தொகுதிகள் தொடர்பாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

“கூட்டணியில் இருந்த போது, கூட்டணி தர்மத்திற்காக சில விஷயங்களில் விமர்சனம் செய்யாமல் அமைதியாக இருந்தேன். தற்போது அந்த நிலை இல்லை” என்றும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா தமிழக அரசின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “அது பற்றி தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என வைகோ தெரிவித்தார்.

வைகோவின் இந்த பேட்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.