தமிழ்நாடு

“காப்பி-பேஸ்ட் அரசு; ரீல்ஸ் வெறியில் தவெக!” – உதயநிதி ஸ்டாலின்

By Sumalekha
18 Jun 2026, 02:40 PM
சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஆளுநர் உரையில் திருத்தங்கள் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி வாசித்திருப்பது தவெக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அவர் கூறினார்.
ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று துவங்கிய நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது,

”திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை, பல திருத்தங்களை செய்வார். ஆனால் இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.

முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தான். திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு காப்பி பேஸ்ட் அரசாக உள்ளது, தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் ட்ரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதை தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content material-ஆக மட்டுமே இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது.

மேலும், ”எப்போதாவது பேசும் முதல்வரை கண்டித்தே திமுக எம்எல்ஏகளாகிய நாங்கள் இன்று “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தோம். அதிலும் தவெக விரிச்சுவல் அபியூஸர்ஸ், முதல்வர் இன்று கோட்டைக்கு வந்தார்; கோட் - சூட் போட்டு வந்தார் ; இன்று வேட்டி சட்டையில் வந்தார் ; டிபன் பாக்ஸ் எடுத்து வந்தார் ; அவர் வாயில் அவரே வைத்து சாப்பிட்டார் என்று எது கிடைத்தாலும் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்”.

”சி.எம் தான் இப்படி இருக்கிறார் என்றால் ஒவ்வொரு தவெக அமைச்சர்கள் & ஒவ்வொரு MLA-க்கள் என அவர்கள் தரப்பில் இருக்கும் அனைவருமே ரீல்ஸ் வெறியில் சுற்றி கொண்டிருக்கிறார்கள் ; எல்லாமே அவர்களுக்கு ரீல்ஸ் தான். இதைப்பற்றியெல்லாம் முதல்வர் கவலைப்படுவது போல் தெரியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்”.