தமிழ்நாடு

குடிபோதையில் அரசு பஸ் டிரைவருடன் ரகளை- மார்க்கெட்டில் அரை நிர்வாண சேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது

By Jayakumar
02 Jun 2025, 10:41 AM
பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை
திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் இரவு அரங்கேறிய பரபரப்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

குடிபோதையில் ரகளை

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், அரசுப் பேருந்து ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு, ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் பேருந்தை மறிக்க முயன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்துங்கநல்லூர் அருகே உழக்குடியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி வந்த அரசுப் பேருந்து, பாளை மார்க்கெட் பகுதியை அடைந்தபோது, ரவீன்ராஜ் (24) மற்றும் சுந்தர்ராஜ் (24) ஆகிய இரண்டு இளைஞர்களால் வழிமறிக்கப்பட்டது. குடிபோதையில் இருந்த இவர்கள் இருவரும் முதலில் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர், திடீரென பேருந்தின் குறுக்கே சென்று, ஓட்டுநர் சசிகுமார் தட்டிக்கேட்டபோது, கோபமடைந்த இருவரும் ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு இளைஞர்கள் கைது

சம்பவத்தின் உச்சகட்டமாக, போதை தலைக்கேறிய இளைஞர்களில் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து, அரை நிர்வாண கோலத்தில் பேருந்தை முன்னேற விடாமல் தடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்கள் செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இந்தக் காட்சிகள் உடனடியாக வைரலாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பேருந்து ஓட்டுநர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ரவீன்ராஜ் மற்றும் சுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் இந்த அநாகரிகச் செயல், பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.