ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (33). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தனது அலுவலகத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் ‘செலிபிரிட்டி’ வரவேற்பா?
இந்த நிலையில், காவல் நிலையத்தில் வெற்றிவேலிடம் தலைமை காவலர் ஒருவர் சகஜமாகப் பேசியதாகவும், அவர் யார் என்று விசாரித்தபோது, “இவர்தானா... ஃபேஸ்புக்கில் போட்டு பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்கிற மனுஷன்” எனக் கூறியதாகவும் புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் ரியல் எஸ்டேட் புரமோட்டர் எனக் கூறியபோது, எதற்காக காவல் நிலையம் வந்திருக்கிறார் என காவலர் கேட்டதாகவும், அதற்கு அருகிலிருந்த ஒருவர், “அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகப் புகார்” எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் காவலர், “அப்படி சொல்கிறார்களா?” எனக் கேட்டதுடன், “நேத்து கூட ஃபேஸ்புக்கில் பார்த்தேனே” எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த உரையாடல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கைது செய்யப்பட்ட நபரிடம் காவல் நிலையத்தில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படும் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
தவெக-வுடன் நெருக்கமா?
இதற்கிடையே, வெற்றிவேல் தவெக ஆட்சி அமைந்த பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், தனது காரில் தவெக கொடியைக் கட்டிக்கொண்டு வலம் வந்ததாகவும், அமைச்சர் செங்கோட்டையனுடன் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு காவல் நிலையத்தில் விஐபி அந்தஸ்து அளிக்கப்பட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
துப்பாக்கியுடன் ரீல்ஸ்...
இதற்கிடையில், வெற்றிவேல் கையில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விவகாரத்தை முன்வைத்து, தவெக நிர்வாகிகள் குறித்து திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபுறம் பாலியல் புகாரில் கைது... மறுபுறம் காவல் நிலையத்தில் விஐபி ட்ரீட்மென்ட் எனக் கூறப்படும் வீடியோ... அதோடு துப்பாக்கியுடன் ரீல்ஸ்!
உண்மையில் இந்த வெற்றிவேல் யார்? அவருக்கும் தவெகவுக்கும் உள்ள தொடர்பு என்ன? காவல் நிலையத்தில் நடந்தது என்ன? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.