தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பு: மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவை பெற்றது தவெக அரசு!

By Christon
13 May 2026, 10:34 AM
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு, புதிய அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவை பெற்றது தவெக அரசு. இதுவரை காங். 5, சிபிஎம் 2, விசிக 2, ஐயூஎம்எல் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு. தவெக ஆட்சிக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜும் ஆதரவளித்துள்ளனர்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று (மே 13) காலை 9.30 மணிக்குச் சட்டமன்றத்தில் தனது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இன்று மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் உரையாற்றியதைத் தொடர்ந்து, அது குறித்த விவாதங்கள் தற்போது அவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார், தங்களது 5 எம்.எல்.ஏ-க்களும் அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். அதேபோல், 2 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தவெக அரசுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன. தவெக-வின் சொந்த பலம் 107 ஆக உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அரசுக்குத் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இதர சிறு கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்த வாக்கெடுப்பில் ஆதரிப்பதா, எதிர்ப்பதா அல்லது வெளிநடப்பு செய்வதா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.