Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

'நீங்க அழாதீங்க மேடம்'.. திருநங்கைகளின் பாசத்தால் கண் கலங்கிய கலெக்டர்

By MUTHUKRISHNAN
25 Jun 2025, 05:54 PM
குடியிருப்பு, சுயதொழில் என தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர் திருநங்கைகள். இதுத்தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலச்சினை (LOGO) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த லோகாவினை மாவட்ட ஆட்சியர் உமா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக எம்.பி.ராஜேஷ்குமார், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டனர்.

இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளதால் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஆட்சியருக்கு நினைவு பரிசுகளை வழங்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது திருநங்கைகள் பலர், ”தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தியது நீங்கள் தான். பல நலத்திட்ட உதவிகளை எங்களுக்காக செய்தீர்கள். நீங்க நல்லா இருக்க வேண்டும்” என திருநங்கைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனை கண்டு மனம் நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியரும் தேம்பி அழத்தொடங்கினார். இதனையடுத்து, “நீங்க அழாதீங்க மேடம்..” என திருநங்கைகள் ஒருசேர ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியரை தேற்றினர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து திருநங்கைகள், மாவட்ட ஆட்சியருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவருக்கு திருநீறு பூசி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த உமா, தற்போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.