Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு!

By Christon
08 Jan 2026, 03:20 PM
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகளில், ஹம்பாந்தோட்டை (இலங்கை) மற்றும் கல்முனைக்கு (இலங்கை) இடையே நாளை (09-01-2026) மாலை / இரவு கரையை கடக்கக்கூடும்.

மிக கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, நாளை (ஜன.09) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை மறுநாள், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.