தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 1) 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
மிக கனமழை எச்சரிக்கை
இதன்காரணமாக, இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட் ) பெய்யக்கூடும். அதேபோல், திருப்பூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை
மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 2) & நாளை மறுநாள்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், வரும் 4ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.