Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

TN Weather: தமிழகத்தில் டிச.15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

By Christon
09 Dec 2025, 03:01 PM
தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) இறுதியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து. அதன்பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும், சில பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. நேற்று திருநெல்வேலி, நாகபட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாகபட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.