Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

By nagalekshmi
04 Feb 2025, 01:17 PM
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சமீபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து போலீஸார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும்  எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து மீண்டும் போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, 7 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து குற்றவாளி ஞானசேகரன் சைதாப்பேட்டை  9-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க  சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், குற்றவாளி ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மனு மீதான விசாரணைக்காக புழல் சிறையில் இருந்து ஞானசேகரனை போலீஸார் அழைத்து சென்றனர். அதாவது, சமீபத்தில் குற்றவாளி ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது வாந்தி. மயக்கம். உடல்நிலை சரியில்லை என கூறி அவர் முறையாக விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.