Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து விடைபெறும் வடகிழக்கு பருவமழை!

By Christon
15 Jan 2026, 03:01 PM
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகபட்சமாக 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிகடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன்காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேலும், வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை வானிலை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.