Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

By nagalekshmi
18 Feb 2025, 12:58 PM
ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரத்து 807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர்.  இவர்கள் மாதம் தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 6-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் அளவில் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் பல நியாயவிலை கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில்  தட்டுப்பாடு ஏற்படுவதால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.