தமிழ்நாடு

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாபட்டி பயணம்

By nagalekshmi
25 Jan 2025, 11:15 AM
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். 

மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  

இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு 
அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

இதன்பின்னர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு ஜனவரி 23-ஆம் தேதி அறிவித்தது. இதனை அரிட்டாபட்டி மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன 26) அரிட்டாபட்டி செல்லவுள்ளார். சென்னையில் நாளை காலை நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்கமாக அரிட்டாபட்டி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.