தமிழ்நாடு

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

By Sumalekha
25 Aug 2026, 07:03 AM
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றின் சந்திப்பு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 25) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் காற்றின் மோதல் காரணமாக மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, நீலகிரி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுதவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.