தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று தீவிரமடையும் கனமழை ! சென்னை வானிலை மையத்தின் அலெர்ட் !

By Santhosh
09 Nov 2026, 03:12 PM
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் நாளையும் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் தமிழ்நாடு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் மாற்றங்கள் என்ன?

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், அரபிக்கடல் நோக்கி நிலவிய காற்றழுத்த தாழ்வு பாதை தற்போது வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 9) எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

இன்று (நவம்பர் 9) தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் இடி, மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நாளை (நவம்பர் 10) கனமழை எச்சரிக்கை

நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காரைக்கால் பகுதியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 15-ம் தேதி மீண்டும் கனமழை வாய்ப்பு

வரும் நவம்பர் 15-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9 முதல் நவம்பர் 13 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.