தமிழ்நாடு

இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

By Christon
29 Jul 2025, 06:12 PM
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு;

இன்று (29-07-2025) காலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டிருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப்படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவமாகும்.

இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெருத்த மனரீதியான மற்றும் பொருளாதார நெருக்கடியையும், வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.