Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: உடனடி தூதரக நடவடிக்கை தேவை- முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

By Christon
03 Nov 2025, 03:38 PM
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சம்பவம் குறித்த விவரம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் படும் துயரம்

மீனவர்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.

உடனடி தூதரக நடவடிக்கை தேவை

எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.