தமிழ்நாடு

தி.நகரில் பயங்கரம்... 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை!

By Sumalekha
25 Jun 2026, 03:42 PM
சென்னை தி.நகர் பகுதியில் சில மணி நேர இடைவெளியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை பணியை முடித்துவிட்டு சென்ற அவர், இரவு தியாகராயர் சாலையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி (34) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ராஜேந்திரனை பாலாஜி தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில், அதே தி.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் பின்புற பார்க்கிங் பகுதியில் ரவிகுமார் (46) என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், திருமண மண்டபங்களுக்கு துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்து வேலை வாங்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பணியாளர்களிடம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணி என்ற சொர்ணகுமார் (65), ரவிகுமாரை கட்டையால் தாக்கியதாக தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். ஒரே பகுதியில், அதுவும் சில மணி நேர இடைவெளியில் இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தி.நகர் மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வழக்குகளிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.