தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதியுடன் ஐடி கார்டு? செங்கோட்டையன் பேச்சு சர்ச்சை !

By Sumalekha
26 Jun 2026, 09:21 PM
அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், "இப்ப பள்ளிக்குச் செல்கிற குழந்தைகள் அனைவருக்குமே ஆண்டுதோறும் அவர்கள் சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு மாற்றத்தை உருவாக்குவதற்காக நடவடிக்கை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

ஐடென்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் முதல்வர் ஆணையிட்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் முதல்வருடைய உத்தரவுக்கு இணங்க அந்தப் பணிகள் நிறைவேற்றப்படும்.

மாணவர்களின் முகவரி, அவருடைய சாதிச் சான்றிதழ், அவருடைய பிளட் குரூப் (Blood Group), அதற்குப்பிறகு ஆதார் அட்டை, அவருடைய தொலைபேசி எண் அனைத்தும் இதிலே இணைக்கப்படும். ஒரு ஐடென்டி கார்டு (ID Card) நீங்கள் வைத்திருப்பதைப் போல, ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்படும். முதற்கட்டமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி பெயர் இடம்பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.