Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. இலங்கையைச் சேர்ந்த தாய்-மகள் கைது!

By VASUKI
17 Jun 2025, 03:39 PM
இலங்கையை சேர்ந்த தாய் மற்றும் மகள் சென்னையிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்றுவிட்டு, திரும்பிய போது போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு, இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வந்த விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர்.

விமானத்தில் சென்னை அரும்பாக்கம் முகவரியில் வசிக்கும் 48 வயது பெண் மற்றும் 21 வயது இளம்பெண் ஆகியோர், இந்திய பாஸ்போர்ட்களில், இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு, திரும்பி வந்தனர். குடியுரிமை அதிகாரிகளுக்கு 2 பெண்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பெண் பயணிகளையும் வெளியில் அனுப்பாமல் குடியுரிமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த 2 பெண் பயணிகளும் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் என்பது விசாரணயில் தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் குடியேறியுள்ளனர். அதன் பின்பு ஏஜெண்டுகள் முலம் போலி ஆவணங்கள் பெற்று, இந்திய பாஸ்போர்ட்டுகள் வாங்கியதாக தெரிகிறது. அந்த பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று திரும்பியது தெரிய வந்தது.

இதை அடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், இலங்கைப் பெண்கள் இருவரையும், போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியது, ஏஜெண்டுகள் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் பெற்றது, போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதற்காக என வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்கு போலி பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொடுத்த ஏஜெண்டுகள் யார்? அதற்காக ஏஜெண்டுகள் எவ்வளவு பணம் பெற்றனர்? என்பது குறித்தும் இரு பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலி பாஸ்போர்ட் தொடர்பாக கைதான, இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும், மேல் நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.