தமிழ்நாடு

ஆட்டத்தை காட்டும் தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

By MUTHUKRISHNAN
24 May 2025, 03:27 PM
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று (24-05-2025) துவங்கி உள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (24-05-2025) 05:30 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08:30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது.

இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதனடிப்படையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை விவரம் பின்வருமாறு-

24-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

25-05-2025 மற்றும் 26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும்.