Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோவையில் அதிர்ச்சி: 13 வீடுகளில் 56 பவுன் நகை கொள்ளை.. குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீசார்!

By Christon
29 Nov 2025, 11:28 AM
கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் (TNHB) 14 மாடிகள் கொண்ட குடியிருப்பு வளாகத்தில் (Housing Unit) அடுத்தடுத்து 13 பூட்டிய வீடுகளில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், மூன்று கொள்ளையர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவம்

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள இந்த ஹவுசிங் யூனிட்டில் சுமார் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். நேற்று (நவம்பர் 28) இரவு, மர்ம நபர்கள் இந்த 14 மாடிக் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து, பூட்டியிருந்த வீடுகளைக் குறிவைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். முதலில் ஒரு வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் வந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மொத்தம் 13 வீடுகளில் கொள்ளை நடந்தது தெரியவந்தது. இதில் ஏ பிளாக் கட்டிடத்தில் 3 வீடுகளும், சி3 பிளாக் கட்டிடத்தில் 10 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை மற்றும் தனிப்படை நடவடிக்கை

சம்பவம் குறித்துப் புகார் வந்ததும், கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க, 3 ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர்கள் கைது

இந்நிலையில், ஹவுசிங் யூனிட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 கொள்ளையர்களைக் கோவை போலீசார் குனியமுத்தூர் பகுதியில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். காயமடைந்த கொள்ளையர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.