தமிழ்நாடு

வார தொடக்கத்தில் ஷாக்.. தங்கம் விலை அதிரடி உயர்வு!

By Christon
15 Jun 2026, 10:19 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கம் விலை, கடந்த 11-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,08,000 என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதனால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 12-ஆம் தேதியில் இருந்து விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினமும் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,880-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில், வாரத் தொடக்கமான இன்று தங்கத்தின் விலை வழக்கத்தை விடப் பெருமளவில் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,680 கிடுகிடுவென உயர்ந்து, இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,560 என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெள்ளி விலை ஏற்றம்

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.10,000 அதிகரித்து, இன்று ரூ.2,80,000 ஆக உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.