தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை சூறையாடிய உறவினர்கள்..!

By VASUKI
07 Feb 2025, 09:09 PM
மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் பயின்று வரும் 4ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்தகுமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை, நடத்தி 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து நள்ளிரவில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில்,  5 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் பள்ளியின் அறங்காவலர் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.