தமிழ்நாடு

பாலியல் தொல்லை வழக்கு...கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

By Jayakumar
15 Apr 2025, 08:05 AM
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை புகார்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ். கிறிஸ்தவ மத போதகரான இவர் கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்த 14 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் பெற்றோர் காட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஜான் ஜெபராஜ் தலைமறைவானார்.

ஜான் ஜெபராஜ் கைது

அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர். தொடர்ந்து, கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்தி வருகிற 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.