Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அமோகமாக நடந்த சாராய விற்பனை.. தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை

By nagalekshmi
15 Feb 2025, 07:47 AM
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம்  பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவன் மற்றும் வேலை தேடும் இளைஞர் ஆகிய இருவரை  சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

சாராயம் விற்பதை தட்டி கேட்பவர்களை அடித்து கொலை மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றது. இதில்,  சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜ்குமார் ஜாமினில் வெளிவந்துள்ளார். 

அப்போது, தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்ட 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத் தெருவை சேர்ந்த ஹரிஷ் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிசக்தி ஆகியோரிடம் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியதில்  ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உயிரிழந்த நபர்களின் உறவினரிடம் விசாரணை மேற்கொண்டார். 

இளைஞர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.