Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கூலிப்படை தலைவனின் உதவியோடு ரவுடி சம்போ செந்தில் தலைமறைவு?.. போலீஸார் தீவிர வேட்டை..

By leninakathiya
09 Aug 2024, 10:16 PM

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும், பிரபல ரவுடி சம்போ செந்தில் கூலிப்படை கும்பல் தலைவனின் உதவியோடு, தலைமறைவானதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் 21 பேரை கைது செய்தனர். அதில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ரூ.200 கோடி நிலப் பிரச்சினையா?.. அஸ்வத்தாமன் சிக்கியது எப்படி?...

விசாரணையில், சம்போ செந்திலுடன் வழக்கறிஞர் சிவா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னையில் காரில் சென்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் ஹரிஹரன் கைது செய்யப்பட்ட பின்பு வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவா உட்பட மூன்று பேரும் காரில் திருச்செந்தூர் வரை சென்றதும் அதன் பிறகு காரிலேயே மதுரை சென்று தலைமறைவாக சுற்றி வந்துள்ளனர். அதன் பிறகு கிருஷ்ணன் தனது காரை சிவாவிடம் கொடுத்து சென்னையில் தனது வீட்டில் விடும்படியும் தனக்கு வேறொரு வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிவா காரை கொண்டு சென்னைக்கு வரும் வழியில் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். 

முன்னதாக சம்போ செந்தில் (Chennai Rowdy Sambo Senthil) கொடுத்த பணத்தில் தான், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக 4 லட்சம் பணம், வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியதும், அதனை மலர்கொடி உள்ளிட்ட சிலருக்கு, வங்கியில் செலுத்தி அதனை பணமாக எடுத்துக் கொடுக்க கூறியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதே போல ஹரிஹரன் மூலமாக தான், வழக்கறிஞர் அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி துப்பாக்கியை காட்டிய பிரபல ரவுடியின் மகன்.. தட்டித் தூக்கிய போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில், சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் தான் ரவுடி சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, மும்பை, நேபாளம், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சம்போ செந்திலை தேடி வந்தனர். ஆனாலும் அவர் சிக்கவில்லை.

தற்போது, சம்போ செந்தில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தென்மாவட்ட ரவுடி ஒருவரின் உறவினர் காஷ்மீர் அருகே இருப்பதாகவும் அவரின் உதவி மூலம் சம்போ செந்தில் பாதுகாப்போடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.