Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் மரணம்- பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

By MUTHUKRISHNAN
09 Jun 2025, 06:09 PM
தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தான் டாக்டரான காலத்தில் நோயாளிகளிடம் வைத்தியம் பார்ப்பதற்கு 2 ரூபாய் என ஆரம்பித்து இறுதிவரை 10 ரூபாய் மட்டுமே வாங்கி சுமார் 65,000 சுகப்பிரசவங்களை பார்த்து பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் மனித நேய மருத்துவர் கனகரெத்தினம்பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இன்று நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் டி.ஏ.கனகரெத்தினம்பிள்ளை (96). இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் கிராமத்தில் 1929-ம் ஆண்டு மருத்துவர் கனகரெத்தினம் பிறந்தார். 1950-ம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பினை முடித்தார். அதனைத் தொடர்ந்து, 1968-ம் ஆண்டு தனியாக கிளீனிக் துவங்கினார்.

டாக்டராக பணியினை துவங்கிய கனகரெத்தினம் ஆரம்பத்தில் நோயாளிகளிடம் வைத்தியம் பார்க்க 2 ரூபாய் கட்டணம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார். அதன் பிறகு 5 ரூபாயாக உயர்த்தினார். அதன் பிறகு 1990 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 10 ரூபாய் மட்டுமே டாக்டருக்கான கட்டணமாக நோயாளிகளிடம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தார்.

டாக்டர் கனகரெத்தினம் இதுவரை சுமார் 65,000 சுகப்பிரசவங்களை பார்த்துள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் ஓய்வெடுத்து வந்திருந்த நிலையில் நேற்று இறந்தார். இவரது உடல் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த மனிதநேய மருத்துவர் கனகரெத்தினம்பிள்ளையின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், டாக்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மறைந்த மருத்துவர் கனகரெத்தினம்பிள்ளையின் உடலானது, சீனிவாசபுரத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்
சடங்குகளுக்கு பிறகு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.