குலைவெட்டியான்பட்டின்னு இந்த ஊருக்கு பேர் வெச்சிருக்கலாம்டே. பொசுக்கு பொசுக்குன்னு போட்டுத் தள்ளிட்டே இருக்கானுவ. நின்னா கொலை, நடந்தா கொலை. ஊராடா இது!' தென் தமிழகம் பக்கம் இப்படியான வசனங்களைக் கேட்கலாம். ஆனால், சென்னையை உரசியபடி இருக்கும் ஒரு மாவட்டமே தலைவெட்டி மாவட்டமாக இருக்கிறதென்றால் அது செங்கல்பட்டு தான். எக்கச்சக்க கம்பெனிகள், பன்னாட்டு நிறுவனங்கள் என தொழில் வாய்ப்புகள் பொங்கி வழியும் இந்த மாவட்டத்தில்தான் ரத்தமும் துள்ளத் துடிக்க பொங்கி வழிகிறது. அதிலும் அரசியல் கொலைகளுக்குப் பேர்போன மாவட்டம் இது!
செங்கல்பட்டு நகராட்சி அ.தி.மு.க.வின் முன்னாள் துணைத் தலைவர் குரங்கு குமார், அதே பதவிக்கு வந்த தி.மு.க. ரவிபிரகாஷ், தேமுதிக கவுன்சிவர் கரேஷ் தேமுதிக மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் அதிமுக புருஷோத்தமன், மறைமலைநகர் அதிமு.க. வேலு, பிவி களத்தூர் தி.மு.க விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக குமரன், சேத்துப்பட்டு தி.மு.க. சங்கர், அதிமுக. இளம்பாசறை நித்யானந்தம் என நீள்கின்றன அரசியல் கொலைகள்.
குரங்கு குமாரின் கொலை எல்லாம் குதறலின் உச்சம். தலை, முகம் எல்லாமே சிதைக்கப் பட்டிருந்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான தி.மு.க.வின் ரவிபிரகாஷும் பின்னாட்களில் அதே ஸ்டைலில் கொல்லப்பட்டார். ரவிபிரகாஷின் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில் ரைட்டு. குரங்கு டீம் பழிக்குப் பழியா சோலிய முடிச்சுட்டாங்க என்றது போலீஸ். ஆனால், ரவியைப் போட்டது குரங்கு குமார் கோஷ்டி அல்ல. அந்த சம்பவத்தை ரத்தம் சிதறச் சிதற பண்ணியவர் பட்டரவாக்கம் சிவா. யார் இந்த சிவா? என்ற கேள்வியுடன் காஞ்சி வட்டார கிரிமினல்களுக்கு அருவா அடித்துக் கொடுக்கும் முன்னாள் தாதாவை சந்தித்தோம்.
"எல்லா கொலைக்கும் ஒரு காரணம் இருக்குற மாதிரி எல்லா இருக்கும் சார். அப்டித்தான் பட்டரவாக்கம் சிவா சுத்திய தூக்குறதுக்கு பின்னணி இருக்குது. ஆக்சுவலா அவங்கப்பாவை போட்டவங்களை திருப்பிப் போடத்தான் பொருளை கையில் எடுத்தான் சிவா. ஆனா, அதை திருப்பி வைக்க அவனால முடியலை. அதுல ரவிபிரகாஷை அவன் செஞ்சதுதான் ரொம்பப் பெரிய சம்பவம்.
செங்கல்பட்டு பக்கத்துல இருக்குற முள்ளிவாக்கம் அடுத்த பட்டரவாக்கம்தான் சிவாவோட ஏரியா. அவங்க அப்பா சந்தீபன் கள்ளச்சாராய வியாபாரி. பெரிய கள்ளச்சாராய வியாபாரி ஒருத்தனோட டீம்ல இருந்த சந்தீபன், தனியா தொழில் தொடங்குனார். இதனால் காண்டான அந்த வியாபாரி தொந்துரவு கொடுத்துனே இருந்தார். இதுல சிவாவோட அப்பாவைக் கொன்னுட்டாங்க 'எங்கப்பாவுக்கு 16ம் நாள் காரியம் பண்றதுக்குள்ளே அவனுங்க சைடுல ஒருத்தனையாவது போடுவேன்'னு சபதம் போட்டு பொருளை எடுத்த சிவா, அந்த காரியத்தை முடிச்சான்.
இதுக்குப் பிறகு அவன் குடும்ப வட்டாரத்துல சாராயம் காய்ச்சுற யாருக்குத் தொல்லைன்னாலும் அவங்களை சிவாவை வெச்சுதான் முடிச்சாங்க அப்பன் கொலைக்கு பழிவாங்க அருவாவை எடுத்தவன், அதையே தொழிலாக்கிட்டான். தனக்குன்னு டீம் ஃபார்ம் பண்ணி சம்பவங்களை பண்ண ஆரம்பிச்சான்.
செங்கல்பட்டு வட்டாரத்துல இருந்த கம்பெனிகளில் மாமூல் வாங்கி பக்கா ரவுடியா ஃபார்ம் ஆனான். ஆல்ரெடி செங்கல்பட்டுல வஸ்தாதா திரிஞ்ச அ.தி.மு.க.வின் குரங்கு குமார், தி.மு.க.வின் ரவி பிரகாஷ் ரெண்டு பேருக்கும் நடுவுல சிவாவின் வளர்ச்சியை பதட்டமா பார்க்க ஆரம்பிச்சுது போலீஸ். எப்படியும் குரங்கு குமாரும். ரவியும் மாறி மாறி வெட்டிகினு செத்துடுவாங்க, அப்புறம் ஏரியா சுத்தமாயிடும்னு போலீஸ் கணக்குப் போட்டிருந்த நேரத்துலதான் திடுதிப்புன்னு இவன் முளைச்சு நின்னான்.
இந்த நேரத்துல குரங்கு குமாரை ரவிபிரகாஷ் போட்டுத் தள்ளிட்டு ஜெயிலுக்குப் போக சிவா இன்னொரு கேஸ்ல உள்ளே போனான். 'அடிங் நீ இன்னா பெரிய தாதாவா?ன்னு தொடக்கத்துல சிவாவை லெஃப்ட்ல டீல் பண்ணுன ரவிபிரகாஷ். அப்புறம் அவனோட ஸ்கெட்ச் கதைகளைக் கேட்டு தோஸ்த் ஆகிட்டான். இவனுங்க உள்ளே ஒண்ணான நேரத்துலதான் அந்த டர்னிங் பாயின்டே நடந்துச்சு. ஜெயிலுக்குள்ள இருந்த சிவாவைப் பார்க்க உஷா நந்தினின்னு ஒரு பொண்ணு வர, 'என் வொய்ஃப் பா இவங்கன்னு ரவிபிரகாஷ் கைல அறிமுகப்படுத்தி வெச்சான் சிவா. அந்தப் பொண்ணைப் பார்த்ததுமே ரவிபிரகாஷ் கண்ணுல கரன்ட் அந்தப் பொண்ணும் தன்னை லயிச்சு பார்த்த மாதிரி இவனுக்குள்ளே ஃபீலிங். இதை சிவா சுவனிக்கலை. அப்புறம் சிவாவைப் பார்க்க வர்றப்பல்லாம் ரவிபிரகாஷும் வந்து நிக்க உஷாவுக்கும் அவனுக்கும் நடுவுல ஒரு வைபரேஷன் செட்டாகிடுச்சு. அப்பவும் சிவாவுக்கு அது புரியாம போனதுதான் விதி இல்லை, சதி!
தி.மு.க. செல்வாக்குல சட்டுன்னு பெயில் வாங்கிட்டு ரிலீஸான ரவிபிரகாஷ்கிட்ட என் ஃபேமிலிய பார்த்தாக்க நான் நல்லா இருக்கேன்னு சொல்லுபான்னு சொல்லிவிட்டான் சிவா. ரவிபிரகாஷ் நேரா உஷா நந்தினிய பார்த்து ஆறுதல் சொன்னான். கம்பிக்கு உள்ளே இருந்து அவன் போட்ட கணக்கு கரெக்டாதான் இருந்துச்சு. அவன் கூட பக்காவா ஒட்டிக்கிச்சு உஷா நந்தினி.
சிவா இல்லாத தைரியத்துல ரெண்டு பேரும் நெருங்கிப் பழகியிருக்காங்க, ஒருகட்டத்துல சிவாவுக்கும் பெயில் கிடைச்சிடுச்சு. வூட்டுக்கு வந்து பார்த்தா அந்தப் பொண்ணைக் காணோம். விசாரிச்சப்பதான் உஷாவை ரவிபிரகாஷ் உஷார் பண்ணிட்ட விஷயம் புரிஞ்சிருக்குது. பொண்டாட்டியவோ, காதலியவோ வேற எவனாச்சும் உஷார் பண்ணினாக்க மண்புழு மனசுக்காரனுக்கே கோவம் வரும். ஆனா, இவனோ ஆல்ரெடி விஷப் பாம்பு, அவன் புத்துக்குள்ளாற கையை விட்டாக்க கம்முன்னா இருப்பான்? காண்டாயிட்டான். ஆனா, உடனே ஆத்திரப்படலை. ரவிபிரகாஷ் பெரிய கை... கட்சிக்காரன் வேற.. சோ, தெளிவா யோசிச்சான். 'இந்த ரவிக்கு என்னைக்குனாலும் என் கைலதான் சாவு. ஆனா, அதுக்கு முன்னாடி அவனைவிட பெரிய தாதாவாகிட்டு, அப்புறமா அவனை சம்பவம் பண்றேன்'ன்னு சபதம் போட்டான்.
இதுக்குப் பிறகு முழு வீச்சுல தொழில்ல கவனம் செலுத்துனான் சிவா. பிசிறே இல்லாம அசைன்மென்ட்டை முடிக்கிற சிவாவோட தொழில் நேர்த்தியைப் பார்த்து எக்கச்சக்க ஆர்டர் குவிஞ்சது. முனி அரசு, ரெட் ஹில்ஸ் ரவி உள்ளிட்ட நாலைஞ்சு கொலைகள், கொலை முயற்சி வழக்குகள் அவன் மேலே பதிவாச்சு. வெறும் சிவா, 'பட்டரவாக்கம் சிவா' ஆனான்.
இன்னொரு பக்கம் அரசியல்ல அடுத்தடுத்த லெவலுக்கு போயிக்கினே இருந்தான் ரவிபிரகாஷ். அவன் நினைச்சபடியே குரங்கு குமாரின் பதவியைப் பிடிச்சு துணைத்தலைவரும் ஆகிட்டாப்ல. அடுத்து எம்.எல்.ஏ, அதுக்கடுத்து அமைச்சர் பதவின்னு டார்கெட் வெச்சு மூவ் பண்ண ஆரம்பிச்சாப்ல. இந்த நிலையில்தான் உட்கட்சி பஞ்சாயத்துல ரவியை தூக்குறதுக்கு பலரும் பிளான் பண்ணிட்டிருந்தாங்க. குரங்கு குமார் குரூப்பும் பழிக்குப் பழியா போட்டுத் தள்ள நேரம் பார்த்துட்டு இருந்துச்சு. இந்த நேரத்துலதான் சிவா ஒரு முடிவுக்கு வந்தான். 'இவன் எம்.எல்.ஏ. ஆயிட்டா அப்பாலிகா ரவியை தொடவே முடியாது. அதுக்குள்ள அவன் கதைய முடிச்சுடணும்'னு துடிச்சான்.
2012ம் வருஷம்... பல நாளா ரவியை ஃபாலோ பண்ணி, தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்குற அன்னிக்கு கொஞ்சம் அசந்த ரவியை சுத்துப் போட்டுச்சு சிவா டீம். யார், என்ன, ஏதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ள வெப்பன்ஸை எடுத்து வெட்டித் தள்ளிட்டானுங்க. குரங்கு குமாரை ரவி டீம் போட்டிருந்த மாதிரியே முகத்தை சிதைச்சு, தலையை கொழப்பி போட்டிருந்தானுங்க.
இந்தக் கொலைக்கு பழியாக சிவாவை போட்டுத் தள்ள நினைச்சான் ரவிபிரகாஷின் மெயின் கையான குள்ள சீனு. கூட்னு வாடான்னு ரவி சொன்னால், கட்டி தூக்கினு வர்ற ஆள்தான் இந்த குள்ள சீனு. தன் தலைவனை கொன்ன சிவாவை கொன்னுட்டு, அந்தக் கொலையோட முடிச்சுக்கலாம்னு ஒரு முடிவோட திரிஞ்சான். ஆனா, அந்த குள்ள சீனுவையும் ஒரு நாள் ஒரு டீம் முடிச்சுவிட்டுடுச்சு. ஆனா, அது சிவாவின் வேலை இல்லைன்னும் போலீஸில் ஒரு டீம் சொல்லுச்சு.
செங்கல்பட்டு ஏரியாவை கைல வெச்சுனு ஆட்டம் போட்ட குரங்கு குமார், ரவிபிரகாஷ் ரெண்டு பேரோட சாவுக்கு அப்பறம் அந்த ஏரியா முழுக்க சிவா கன்ட்ரோலுக்கு வந்துச்சு. மிதமிஞ்சிய பணப்புழக்கம்.. சிவாவை மாஸா தன்னை நினைக்க வெச்சுது. அவனோட ஆட்டத்தை அடக்க குண்டாஸ்ல போட்டுப் பார்த்தாங்க. ஆனா, அந்த வழக்குகளை உடைச்சு வெளியில வந்துட்டு மறுபடியும் சம்பவங்களைப் பண்ணுனான். இப்பவும் போலீஸ்காரங்களும், ரவிபிரகாஷின் விசுவாசிகள் உள்ளிட்ட சிலரும் அவனுக்கு குறி வெச்சிட்டேதான் இருக்காங்க. பட்டரவாக்கம் கொஞ்சம் அசந்தாலும், பட்டுனு போடப்படுற நிலைமைதான் வாத்யாரே” என்று முடித்துவிட்டு நச்சுன்னு ரெண்டு லெமன் டீ சொன்னார்.
(ரத்தம் தெறிக்கும்) - எஸ்.ஷக்தி.