காசி மேல! காசி கீழ! காசி சைடுல! காசி தலையில! காசி கைல வெட்டு...' -என்னாங்கடா சோஷியல் மீடியா ரீல்ஸ் பாட்டை பயங்கரமா பங்கம் பண்ணி வெச்சிருக்காங்களே? என்று நீங்கள் டெரராக ரியாக்ஷன் கொடுப்பது புரிகிறது.
ஆனால், இதையெல்லாம். பண்ணியிருப்பதே காசிக்காகத்தான் இன்ஸ்டாகிராமில் 'நாமக்கல் காசி, நாமக்கல் கிங்காசி, காசியார்' என்று ரணகள பெயர்களில் அக்கவுன்ட்கள் அல்லு தெறிக்கின்றன. அவற்றில் நோ ரூல்ஸ் ஒன்லி டூல்ஸ்' என்று இரட்டைக் கத்திகளுடன் ப்ரொஃபைல் ஒன்று பேயடி அடிக்கிறது!
யார் இந்த காசி? நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த துரையின் மகன் காசிராஜன். இன்றைய தேதிக்கு 35 வயதிருக்கும். ஆனால், அதற்குள் கொலை, கொலை முயற்சி உட்பட சுமார் 15 வழக்குகள். இரண்டு முறை பயங்கர. வெட்டுக்குத்துக்கு ஆளாகி, எமலோகத்தின் என்ட்ரன்ஸ் வரைக்கும் போய் திரும்பியிருக்கிறார். தமிழக தாதாக்கள் வட்டாரத்தில் 'கிங்காசி', போலீஸின் ரெக்கார்டில் 'நாமக்கல் காசி" அதேவேளையில் நாமக்கல்லைச் சேர்ந்த மிகப்பெரிய இளைஞர் டீமோ காசியார் என்று இவரை சோஷியல் மீடியாவில் ஆன்ட்டி ஹீரோவாக்கி அழகு பார்க்கிறது!
காசியின் ப்ரொஃபைலை அறிந்து வைத்திருக்கும் லேடி இன்ஸ்பெக்டர் ஒருவரை சேலத்தில் சந்தித்தோம். விலாவாரியாக விளக்கினார். "ஜடா முடி, நீண்ட தாடி, ருத்ராட்ச மாலை, கை கால்கள்ல கரப்பு, டெரர் டாட்டூஸ்னு வலம் வர்ற தாதா தான் நாமக்கல் காசி, தன்னை நல்லவன் மாதிரி, காட்டிப்பான். காசிகூட நின்னு போட்டோ எடுத்துட்டு அதை இன்ஸ்டாகிராம்ல 'பிரபல நூறு பர்சன்டேஜ் ரவுடி காசியாருடன்'ன்னு போஸ்ட் போடுற பசங்களும் இங்கே ஏராளம். அவனை ஹீரோவாட்டாம் கொண்டாடுறானுங்க.
காசியும், 'கண்ணுங்களா சின்ன வயசுலேயே தப்பான பாதைக்கு வந்து நான்தான் ரவுடியாயிட்டேன். நீங்க என் பின்னாடி வராதீங்டா குழந்தைங்களா. அண்ணன் ரொம்ப தூரம் போயிட்டேன், இனி திரும்பி வர முடியாதுன்னு சினிமா டயலாக் வேற பேசி தன்னை பெரிய ஆளுமையா காட்டிக்கிறான். ஆக்சுவலா சின்ன வயதிலேயே அடிதடின்னு இறங்கி காசி அப்பவே சேஸ்களை பார்த்துப்டான். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில இருந்து வந்தது அவனோட அட்ராசிட்டி அடையாள அட்டை அடிப்படையில் நல்ல டான்ஸர், இப்பகூட ஏழைப் பசங்க பலருக்கு டான்ஸ் ஸ்கூல் நடத்தி கத்துக் கொடுத்து சம்பாதிக்க வைக்கிறான். அவனுக்கு மனசுல ஜூனியர் ராகவா லாரன்ஸுன்னு நினைப்பு. ஆக்கவலா டான்ஸர்னாலும் பண்றதெல்லாம் அட்ராசிட்டி வளர்றப்புவே சுத்திய பிடி, லத்தி அடின்னு பார்த்தவன். ஒரு கட்டத்துல கொலைகளுக்கு அஞ்சாதவனா உருவெடுத்தான். தன்னோட 23ம் வயசுல காதல் தகராறு தொடர்பா முதல் கொலையில் இறங்கினான். 2013ல் நாமக்கல் நடராஜபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை கொன்னான். கொஞ்சம் அசந்திருந்தா இந்த சம்பவம் ரெட்டைக் கொலையில் முடிஞ் சிருக்கும். இந்த சம்பவம் நாமக்கல்லையே அதிர வெச்சுது. காரணம், சரமாரியான வெட்டுக்கள் விழுந்திருந்ததுதான். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி ஜெயிலுக்குப் போன காசி அப்புறம் வெளியில வர்றான்.
முதல் கொலை சம்பவமே செம்ம வெயிட்டா பண்ணினதாலே அவன் பேரு போலீஸ்லேயும், ரௌடிங்க ஏரியாவிலேயும் பிரபலமாயிடுச்சு. இதுக்குப் பிறகு தன்னை 'நாமக்கல் காசின்னு அடையாளப்படுத்திக்கிட்டான். 2015ல் நாமக்கல்ல சுப்ரமணி எனும் சுப்புராஜ் என்கிற பழக்கடைக்காரரை கழுத்தறுத்துக் கொலை செஞ்சது காசி டீம். இதிலும் காசியே மிக முக்கிய குற்றவாளி. ஏன்டா பழக்கடைக்காரரை கொன்னீங்க?'ன்னு போலீஸ் கேட்டதுக்கு காசி சொன்ன பதில் ஷாக்கடிச்சுது. அதாவது, அந்தக் கொலையை அவன் தன்னோட விரோதத்துக்காகவோ, இல்ல பணத்துக்காகவோ பண்ணல, தன்னோட நண்பன் வீராங்கிறவனுக்காக பண்ணியிருக்கான். அதுவும் வீராவோட கள்ளக்காதலுக்காக இந்தக் கொலை நடந்திருக்குது. வீராவுக்கு பழக்கடைக்காரர் மனைவியோட லிங்க் இருந்திருக்குது. இதை அவர் கண்டிச்சதால வீராவோட அந்த லேடி பேச்சை நிறுத்தியிருக்குது. இதனால வீரா சோகமாகி, என் ஆளை என்கூட பேச வேணாம்னு தடுக்குற அவ வீட்டுக்காரன் இருக்கவே கூடாதுடா'ன்னு பொங்கியெழ நண்பனுக்காக அந்தக் கொலையை முன்னாடி நின்னு பண்ணினான் காசி இதுல ஒரு கொடுமை என்னன்னா இந்த கொலைக்கான கூலி டீம்ல மைனர் பையன் ஒருத்தனையும் பயன் படுத்தினானுங்க.
இந்த கேஸ்ல உள்ளே போயிட்டு வெளியில வந்த பிறகு 7/14 நண்பர்களான காசியும், வீராவும் விரோததீதுல. பிரிஞ் சுட்டானுங்க. இதுக்கு முக்கிய காரணமே காசி பெரிய ரவுடியா நிலை தின்னுட்டானே அப்படிங்கிற பொறாமை உணர்வுதான்னு ரவுடிங்க வட்டாரத்துல பேச்சு. பிரிஞ்ச காசியும், வீராவும் ஒருத்தனை ஒருத்தன் தாக்க ஆரம்பிச்சானுங்க. ஒருகட்டத்துல ஒருத்தனை ஒருத்தன் போட்டுத் தள்ளுற முடிவுக்கும் வந்துட்டானுங்க. இதுல யார் யாரை முதல்ல போட்டுத்தள்றதுங்கிறதுதான் ரேஸே. 2018ல் காசி பைக்ல வந்துட்டிருந்தப்ப ரவுண்டு கட்டுன வீராவோட கையாளுங்க 6 பேர் அவனை கீழே தள்ளிவிட்டுட்டு வெட்டினானுங்க. ஹெவியான தாக்குதல்தான் ஆனாலும் பிழைச்சுட்டான் காசி. இதுல காசி காலின்னு நினைச்ச வீரா வெறுத்துட்டான்.
உடல் தேறி வந்த காசி திருந்துனானான்னு பார்த்தா அதுதான் இல்ல. ஒரு கொலை முயற்சி வழக்கில் சிக்கி உள்ளே போனான். இதுல அவன் மேலே குண்டாஸ் பாய்ஞ்சுது. அப்புறம் ரிலீஸாகி வெளியில வந்த காசி வழக்கம்போல ரவுடித்தனம். கட்டப்பஞ்சாயத்துன்னு பண்ண ஆரம்பிச்சான்.
சேலம், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் தங்களோட வேலைகளுக்கு காசி மற்றும் வீராவை தனித்தனியா பயன்படுத்தினாங்க, காஸ்ட்லி நிலத்தை தரமட்டமா விலை குறைச்சு கேக்குறது, இதுக்கு அந்த நில உரிமையாளர் படியாட்டா இவங்களை விட்டு கொலை மிரட்டல் பண்றதுன்னு கிரிமினல்தனம் பண்ணினானுங்க. இந்த தொழில்லேயும் காசிக்கும். வீராவுக்கும் இடையில மோதல் தொடர்ந்துச்சு.
ரெண்டு பேரும் வெளி ஆர்டர் எடுத்து அடுத்தவன் உயிருக்கு உலை வைக்கிறது மட்டுமில்லாம பரஸ்பரம் போட்டுத் தள்ளுறதுலேயும் முப்பொழுதும் முனைப்புக் காட்டினானுங்க இதுல வீராவுக்குதான் காசி மேல ஓவர் வெறியா இருந்துச்சு. காரணம், பல ஏரியா பசங்களை வளைச்சுப் போட்டு காசி தனக்குன்னு ஒரு படையை -உருவாக்கிட்டான். படிப்புக்கு காசு கொடுக்குறேன். ஏரியா திருவிழாவுக்கு காசு கொடுக்குறேன்னு சொல்லி இளசுகளை வளைச்சுட்டான்.
இதுவும் வீராவை கடும் கோபமாக்கிட மறுபடியும் காசிக்கு ஸ்கெட்ச் போட்டான். 2020ல ஒரு நாள் சேந்தமங்கலம் சாலையில் கோயில்ல சாமி கும்பிடப் போனான் காசி ஏற்கெனவே அங்கே சாமி கும்பிடுற மாதிரி ரெண்டு பேர் வெயிட் பண்ணிட்டிருந்தானுங்க வழிப்போக்கனாட்டமா இன்னொருத்தனும் வந்தான். காசி அசந்து நின்ன நேரம் பார்த்து மூணு பேரும் பாய அப்பதான் சுத்துபோடப்பட்டது காசிக்கு புரிஞ் சாலும் வெட்டு விழுந்துடுச்சு. ஆனாலும் தப்பிச்சு ஓடுனவன், தள்ளிப் போய் நின்னுட்டு 'இப்ப வாங்கடா வெட்டிக்கலாம். யார் வெட்டுல யார் சாவுறான்னு பார்க்கலாமின்னு சவுண்டு விட்டான். சூழ்நிலை சரியில்லாததால அந்த கூலிப் பசங்க எஸ்கேப்பாகிட்டானுங்க. இந்த முயற்சியிலேயும் காசி காலியாகாம எஸ்கேப் ஆக, வீராவுக்கு வெறியேறிடுச்சு. ஆனாலும் காசி கதையை முடிக்க முடியலை.
தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல்னு போலீஸ் கையில் சிக்கிட்டே இருந்தான் காசி சில மாசங்களுக்கு முன்னாடிகூட சென்னை பெங்களூரு ஹைவேஸ்ல கார்ல ஆயுதங்களோடு சிக்கினான். ஆம்பூர் புறநகர் போலீஸ் அவனை அள்ளிட்டு போயி 'என்னடா ஜடாமுடி, ஜெர்கின், டீ ஷர்ட்ன்னு விநோதமா திரியுற ஸ்டைலு ரவுடியாடா நீ?ன்னு முதல்ல நாலு ஏத்து ஏத்தினாங்க. அப்புறமா அவனோட கிரிமினல் ஹிஸ்டரியை நாமக்கல் மாவட்ட போலீஸ்ட்ட விசாரிச்சுட்டு, சத்தம் காட்டாம கொண்டு போய் ஜெயில்ல போட்டுட்டாங்க.
ஆக்சுவலா, ஆம்பூர் பக்கம் பெரியகுப்பத்துல ஒரு வீட்டை ரகசியமா வாடகைக்கு எடுத்துப் பதுங்கியிருந்தவன் அப்பப்ப நாமக்கல்லுக்கு வந்து அட்ராசிட்டி வேலைகளுக்கு ஆஜர் போட்டுட்டு போயிருக்கான்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்பவும் கொலை, கொலை முயற்சி, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்துன்னு ரகம் ரகமா கிரிமினல்தனங்கள்ல சிக்கி ஜெயிலு, ஜாமீனுன்னு உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டிருக்கான் காசி. ஆனாலும், தன் தலைக்கு மேல சுத்தி ஒண்ணு குறி வச்சிக்கிட்டே இருக்குங்கிறது அவனுக்கு நல்லாவே தெரியும்" என்றபடி தொப்பியை எடுத்து மாட்டினார் அதிகாரி!
(ரத்தம் தெறிக்கும்) - எஸ் . ஷக்தி .