தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ரேபிடோ ஓட்டுநர்.. பணம் கொடுக்க மறுத்ததால் பொய்ப் புகாரா?

By Christon
28 Oct 2025, 10:55 AM
சென்னையில் வசித்து வரும் திரிபுராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 'ரேபிடோ' ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 'ரேபிடோ' (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால், இந்த புகார் அளிக்கப்பட்டதாக ஓட்டுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

திரிபுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் மதுரவாயலில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த இளம்பெண், ஒரு 'ரேபிடோ' பைக்கை புக் செய்து பள்ளிக்கரணைக்குச் சென்றுள்ளார். பின்னர், வேளச்சேரி பாலத்தில் இருந்து அதே ஓட்டுநரை மீண்டும் வரவழைத்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

கணவரிடம் அளித்த புகார், காவல்துறை நடவடிக்கை

இளம்பெண் வீட்டில் இறங்கும்போது, தனது கணவரிடம் அந்த 'ரேபிடோ' ஓட்டுநர் மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த 'ரேபிடோ' ஓட்டுநரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

ஓட்டுநர் அளித்த அதிர்ச்சித் தகவல்

கைது செய்யப்பட்ட சிவகுமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் வேறுவிதமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கரணைக்கு அழைத்துச் சென்ற பின்னர், இளம்பெண் 20 நிமிடத்தில் மீண்டும் தன்னை அழைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். வரும் வழியில், இளம்பெண் தன்னிடம் இருசக்கர வாகனம் ஓட்டக் கற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும், தான் வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, பரஸ்பரம் உடலுறவு கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர், வீட்டில் இறக்கிவிடும்போது இளம்பெண் தன்னிடம் ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், தான் பணம் கொடுக்க மறுத்ததால், உடனடியாக அவரது கணவரிடம் கூறி அவர் கல்லால் தாக்கியதாகவும் விசாரணையில் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் தரப்பில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டாலும், காவல்துறையினர் சிவகுமாரை பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.