Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

By Christon
04 Aug 2025, 05:16 PM
தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பால்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதி கனமழைக்கான வாய்ப்பு

நாளை (ஆகஸ்ட் 5) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.