Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழை பெய்யக்கூடும்!

By Christon
28 Jul 2025, 06:55 AM
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத் - வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.

மழைக்கான வாய்ப்பு:

இதன் காரணமாக, இன்று (ஜூலை 28) முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஆகஸ்ட் 1, 2ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக் கூடும்.

சென்னை வானிலை:

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வரும் 31 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.