Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
02 Jan 2026, 04:42 PM
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், நேற்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை நீலகிரி மாவட்டம், குன்னூரில் 26 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளத்தகா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கனமழை எச்சரிக்கை

இதன்காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கோயம்புத்தூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை (ஜன.3)தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அதேபோல் வரும் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.