Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
22 Nov 2025, 01:45 PM
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், திருவள்ளுர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், வரும் 25 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், நேற்று (நவ.21) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, (நவ.23) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.