தமிழ்நாடு

Rain Alert: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
20 Nov 2025, 03:17 PM
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசி மாவட்டம், ஆயிக்குடியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நாளை (நவ.21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.