Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அதிவேகமாக சென்ற கார்.. சினிமா பணியில் துரத்திய போலீசார்

By Jayakumar
09 Jun 2025, 08:44 AM
செய்யாறு அருகே தடுப்புகளை மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஞான முருகன் பூண்டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அதி வேகமாக வந்த காரை தடுப்புகளை அமைத்து நிறுத்தமுயன்றனர். ஆனால் கார் ஓட்டுநர் தடுப்புகளை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை துரத்திச் சென்றுள்ளனர்.

அதி வேகமாக சென்ற காரை சுமார் 15 கிலோமீட்டர் போலீசார் பின்தொடர்ந்தபோது, கீழபழந்தை பகுதியில் வயல்வெளி பள்ளத்தில் அந்த கார் இறங்கி நின்றுள்ளது. இதனையடுத்து, ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரித்த போது, செய்யாறு அடுத்த ராந்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பதும் அவர் மது அருந்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர், உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்கு செய்யாறு நோக்கி சென்றபோது பூதேரி பள்ளவாக்கம் பகுதியில் ஆடு ஒன்று காரில் அடிபட்டு சிறு காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு ஆட்டின் உரிமையாளர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளார். இதனால் பயந்து காரை அதிவேகமாக ஓட்டியதாகவும், தான் குடிபோதையில் உள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என்பதற்காக தடுப்புகளை இடித்து நிற்காமல் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, காரை குடிபோதையில் அதி வேகமாக ஓட்டியதற்காக அபராதம் விதித்த செய்யாறு போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். சினிமா பாணியில் போலீசார் காரை துரத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.